×
 

இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்..!! சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு..!!

முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்வதால், இன்று தொடங்கி வைக்க இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல்வர் விஜய், அதன் பிரம்மாண்ட தொடக்க விழாவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். கடந்த மே 10ம் தேதி அன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அன்று மாலை சென்னை கோட்டையில் தனது அறையில் அமர்ந்தவுடன் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட 'சிங்கப்பெண்' திட்டமாகும். 

இந்த திட்டம் பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறை, பாலியல் தொல்லைகள் மற்றும் சைபர் குற்றங்களான ஆன்லைன் ஸ்டாக்கிங், மிரட்டல், போலி செய்தி பரப்புதல் உள்ளிட்டவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சிறப்பு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தின் 37 முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு இந்த அதிரடிப் படையினர் தொடர்ச்சியான ரோந்துப் பணி, உடனடி பதில் நடவடிக்கை மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை மையங்களை இயக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 27) சென்னையில் பிரம்மாண்ட அரசு விழாவாக இத்திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதல்வர், பிரதமரை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார். இந்த முதல் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பிய சில நாட்களுக்குள் 'சிங்கப்பெண்' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது, பொது இடங்களில் பாதுகாப்பின்மை உணர்வு, சமூக ஊடகங்கள் வழியான தொல்லைகள் ஆகியவை தொடர்ந்து பிரச்னையாக இருக்கும் சூழலில், இந்த சிறப்பு படை ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. முதல்வர் விஜய்யின் இந்த முயற்சி, தமிழகத்தில் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: 15 நாளில் 45 கொலைகள், 74 கற்பழிப்புகள்! முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share