தென் தமிழகத்தை புறக்கணிக்காதீர்கள்! பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்கும் 11 மாவட்ட தொழில் சங்கங்கள்!!
மதுரை உள்ளிட்ட 11 தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளதால் தமிழக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாத நிலையில், வரும் தமிழக பட்ஜெட்டில் இந்தப் பகுதிகளுக்கென கூடுதல் நிதி ஒதுக்கி சிறப்பு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் தமிழக அரசிடம் முன்வைத்துள்ளது.
சங்கத் தலைவர் ரத்தினவேல் கூறுகையில், தமிழகத்தில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறியுள்ள நிலையில், தென் மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி கிடைக்க வேண்டுமெனில், தென் தமிழகத்திற்கென தனித்துவமான திட்டங்கள் அவசியம் என்றார்.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயற்கை வளம், மனிதவளம், வேளாண் திறன், சுற்றுலா வளம் மற்றும் புவியியல் சிறப்பம்சங்கள் அதிகமாக உள்ளன. இந்த வளங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தொழில், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல் பட்டியல்?! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக! அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!
சுற்றுலா, வேளாண்மை, உணவுப் பதப்படுத்தும் தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், உற்பத்தித் துறை, ஏற்றுமதி மற்றும் அறிவுசார் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறப்பு முதலீடுகள் செய்யப்பட்டால் தென் தமிழகத்தின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மதுரையில் சாலை மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இருப்பதால், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், தொழில்துறை கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் நடத்த ஏற்ற வகையில் நிரந்தர சர்வதேச மாநாட்டு மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் தென் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், பாரம்பரிய, ஆன்மிக, இயற்கை, மருத்துவ, கிராமப்புற, மலை மற்றும் கடற்கரை சுற்றுலா வாய்ப்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
வரும் தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு தனி வளர்ச்சி திட்டங்களும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டால், தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரமும் புதிய உயரத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பு தொழில் வட்டாரங்களில் நிலவுகிறது.
இதையும் படிங்க: மூன்று மாதத்தில் ₹20,881 கோடி கடன்! வருவாயில் 22.82% வட்டிக்கே செலவு! தமிழக அரசின் நிதி நிலை முழு விவரம்!