×
 

போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

கோவா போன்ற சுற்றுலா மாநிலங்களிலும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அமித் ஷா உறுதியளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத் தலைநகர் பனாஜியில் உயர்மட்டக் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். 

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக மாறியுள்ளதை அவர் வலியுறுத்தினார்.

“போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்திதான் 2047-ல் இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும். இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாடு” என்று அமித் ஷா குறிப்பிட்டார். 2014-க்கு முன்பு போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் சிறிய அளவிலும், தனித்தனியாகவும் நடந்து வந்தன. ஆனால் தற்போதைய அரசு இதை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி தீவிரமாக எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: சென்னையில் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு! முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு கைது!

போதைப்பொருள் கடத்தல் எதிர்காலத் தலைமுறையை அழிப்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் கருப்புப் பணம் பயங்கரவாதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்த அதே உறுதியுடன் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் எதிர்கொள்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

ஐந்து தசாப்தங்களாக நீடித்த நக்சல் பிரச்சினையை அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது போல, போதைப்பொருளையும் ஒழிக்கும். அதற்காக 2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் சிறப்புச் செயல் திட்டம் தயாராக உள்ளது. 2026 முதல் 2029 வரையிலான மூன்று ஆண்டுகள் ‘மிஷன் மோட்’ காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நான்கு தூண்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உளவுத் தகவல் மற்றும் நடவடிக்கை அடிப்படையிலான அமலாக்கம், முன்னோடி மற்றும் செயற்கை போதைப்பொருள் கட்டுப்பாடு, தேவைக் குறைப்பு மற்றும் தீங்கு குறைப்பு, திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை அவை. 2029 மார்ச்சுக்குள் 100 தேசிய-சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல்களை அழிப்பது, 100 தப்பியோடிய குற்றவாளிகளை நாடு திரும்பச் செய்வது உள்ளிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

விழிப்புணர்வுப் பிரச்சாரம் 50 கோடி மக்களைச் சென்றடையும். ஒரு லட்சம் ‘நஷா முக்த் மித்ராக்கள்’ உருவாக்கப்படும். மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். கோவா போன்ற சுற்றுலா மாநிலங்களிலும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அமித் ஷா உறுதியளித்தார்.

போதைப்பொருள் இல்லாத இந்தியாவே வளர்ந்த பாரதத்திற்கான அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், அனைத்து மாநிலங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share