×
 
☰

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நவ.12 முதல் வாய்ப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்கான (Special Summary Revision) கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை வரும் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 21-ன் கீழ், தகுதியான அனைத்துக் குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில், 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு (Qualifying Date) இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்து வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் வரும் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே கதவு எண் கொண்ட வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் ஒரே பிரிவின் கீழ் (Same Section) இடம்பெறுவது கள ஆய்வின் மூலம் கட்டாயம் உறுதி செய்யப்படும்.

இதையும் படிங்க: மக்களே கவனிங்க... விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்... தேர்தல் ஆணையம் முடிவு.!

வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12 அன்று வெளியிடப்படும். அன்றைய தினம் முதல் டிசம்பர் 11 வரை புதிய பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் நீக்கங்களுக்கான விண்ணப்பங்கள் (படிவங்கள் 6, 7 மற்றும் 8) பெறப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் இதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். பெறப்படும் மனுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களிலும் வரும் 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும்.

18 வயது நிரம்பிய தகுதியான புதிய வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களைச் சேர்ப்பதை அதிகாரிகள் தீவிரமாகக் களப்பணியாற்றி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share