×
 

மூச்ச்ச்!!! வாயை திறக்கவே கூடாது!! கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் மறைமுக வார்னிங்!

பீகார் தேர்தல் முடிவு, அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து, தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸ் அதிக இடங்கள் கோருவதற்கு இது ஒரு பின்னணியாக உள்ளது.

நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் 'அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டசபை தேர்தல்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். அதில், "பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிதிஷ் குமாருக்கு என் பாராட்டுகள். ஓயாமல் பிரசாரம் மேற்கொண்ட தேஜஸ்வி யாதவுக்கும் என் பாராட்டுகள். 

நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியை தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி ஓட்டுகள் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது என பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. 'இண்டி' கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பீகார் தோல்விக்கு SIR–ஐ குறை சொல்லக்கூடாது! அகிலேஷ் சொல்லுறது தப்பு! அசாதுதீன் ஓவைசி!

இந்தப் பதிவு, தேர்தல் முடிவுகள் நலத்திட்டங்கள், சமூக-அடிப்படை கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி, இறுதி வரை அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகக் கூறுகிறது. இண்டி கூட்டணித் தலைவர்கள் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தேர்தல் ஆணையத்தின் (இ.சி.ஐ.) செயல்பாடுகளை விமர்சித்து, "இந்தத் தேர்தல் முடிவு இ.சி.ஐ.யின் தவறுகளையும் அக்கறையின்மையையும் மறைக்காது. ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகக் குறைந்த நிலையில் உள்ளது. மக்கள் நம்பகமான, பாரபட்சமான தேர்தல் ஆணையத்தை எதிர்பார்க்கின்றனர்" என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: பீகார் தேர்தலில் காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியின் மகன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸுக்கு தி.மு.க. தலைமை விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை. 

சமீபத்தில் காங்கிரஸ் அதிக தொகுதிகள் கோரி ஆட்சியில் பங்கு கேட்க, மிரட்டல் விடுக்கும் வகையில் 'எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் த.வெ.க. கூட்டணிக்குச் செல்வோம்' என்று சில கோஷ்டித் தலைவர்கள் பேசியுள்ளனர். இந்நிலையில், பீகார் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காமல், தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளைப் பெற்று தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது. 2026 தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸ் அதிக இடங்கள் கோருவதால், தி.மு.க. தலைமை இந்த விவகாரத்தில் கவனமாக இருக்கிறது. பீகார் தோல்வி காங்கிரஸின் தேசிய அளவிலான பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதைத் தழுவி, தமிழகத்தில் கூட்டணி ஒழுங்கைப் பேண வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்துகிறது.

முதல்வரின் இந்தப் பதிவு, இண்டி கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக இருந்தாலும், காங்கிரஸின் கோரிக்கைகள் அதிகரிப்பதைத் தடுக்க இது உதவும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share