RSS மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல்வீச்சு?! அடையாளம் தெரியாத நபருக்கு போலீசார் வலைவீச்சு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல்லெறிந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஃபிரோசாபாத்: ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் பயணித்த விரைவு ரயிலின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கான்பூரிலிருந்து டெல்லி நோக்கி வியாழக்கிழமை சென்ற ஸ்வர்ண சதாப்தி விரைவு ரயில் (12003) இல் மோகன் பாகவத் பயணம் செய்தார். ரயில் ஃபிரோசாபாத் மாவட்டம் வழியாகச் சென்றபோது, அவர் அமர்ந்திருந்த E-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை நோக்கி ஒருவர் கல் எறிந்தார். கல் தாக்கியதில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் மோகன் பாகவத் உள்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் நடந்த உடனேயே ரயில் நிறுத்தப்பட்டு உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆக்ரா மண்டல கூடுதல் டிஜிபி மற்றும் ஆக்ரா சரக டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கல் எறிந்த நபரை உடனடியாக கைது செய்ய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள், ரயில் பாதையின் இருபுறமும் உள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மோகன் பாகவத் போன்ற முக்கிய பொதுநலன் தலைவர்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், பாஜக தொண்டர்களும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட செயல் என சிலர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மோகன் பாகவத் பாதுகாப்புடன் தில்லி சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணங்களின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் வலுத்து வருகிறது. போலீஸார் விரைவில் குற்றவாளியை கைது செய்து விசாரணையை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!