மாணவர்களின் பூணூல் அறுப்பு.. தேர்வு மையத்தில் அத்துமீறல்.. 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!
கர்நாடகாவில் மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஊர்க்காவல் படையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு NEET தேர்வு நடப்பது போல, கர்நாடக அரசு தேர்வாணையம் சார்பில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு (CET) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வில் NEET தேர்வுக்கு விதிக்கப்படுவது போல, ஆள்மாறாட்டம், காப்பி அடிப்பதை தடுக்க ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவிகள் கம்மல், சங்கிலி அணிந்து வரவும், ஷூ அணிந்து வரவும், மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், ஷராவதிநகரா பகுதியில் ஆதிசுஞ்சனகிரி இண்டிபெண்டனர் பியூ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 16ஆம் தேதி பொது நுழைவுத் தேர்வு (CET) நடைபெற்றது. இந்த தேர்வை எழுவதற்காக இரண்டாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் இந்த கல்லூரிக்கு வந்துள்ளனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு ஊர்க்காவல் படையினர், அவர்களை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி அவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மேலும் 2 மாணவர்களின் பூணூலை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெட்டி அகற்றினர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் விபரீதம்.. காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி.. வீடியோ காலில் கொலையை ரசித்த குரூரம்..!
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணர் சமுதாய சங்கம் சார்பில் அதன் தலைவர் ரகுநாத், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். பூணூல் கழற்ற சொன்ன ஊர்க்காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பிராமண சமூகத்தினர், போலீசில் புகார் அளித்தனர்.
பிரச்னை பூதாகரமான நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக அம்மாநில அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்து இருந்தார். இச்சம்பவம் குறித்து கர்நாடக தேர்வாணைய இயக்குனரும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தீர்த்தஹள்ளி போலீசார், அந்த மாணவர்களின் பூணூலை வெட்டிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், பூணூலை வெட்டி அகற்றி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பிராமணர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஊர்க்காவல் படையினர் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. மேலும், தேர்வு நடத்தும் அதிகாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொன்றதாக கணவன் கைது.. 2 ஆண்டுகள் சிறையில் தவிப்பு.. மனைவி மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..!