ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்ருங்க!! பேரம் பேசும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்!!
தொழிலதிபர்களின் மனைவியரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 217 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக மோசடி வழக்குகளில் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டில்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ரான்பாக்சி நிறுவன உரிமையாளர்களின் மனைவியரிடம் இருந்து 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில் சமரசம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக பாதிக்கப்பட்ட அதிதி சிங்கிற்கு 217 கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளதாக டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டில்லியில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகார வர்த்தகத்தில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததில் பிரபலமானார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கியது உள்ளிட்ட பல மோசடி வழக்குகளில் தற்போது சிறையில் உள்ளார்.
இதையும் படிங்க: அறவழியில் போராடும் ஆசிரியர்கள்!! ஆடையை கிழித்து அடக்குமுறை ஏன்? ஆசிரியர் பேரவை கண்டனம்!
ரான்பாக்சி நிறுவன உரிமையாளர்கள் சிவந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் மோசடி வழக்கில் சிறை சென்றபோது அவர்களது மனைவியரைத் தொடர்பு கொண்ட சுகேஷ், வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி 200 கோடி ரூபாய் வரை பறித்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சுகேஷ் தரப்பில் அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் புகார்தாரரான சிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிற்கு 217 கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சமரசம் சுகேஷின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் இந்த நடவடிக்கை வழக்கை சமரசமாக முடிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!