பதுக்கிய பண மூட்டை எரிந்த விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி! கிடுக்குப்பிடி!
தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட பார்லி குழுவின் விசாரணையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியின்போது, அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதையும் படிங்க: விஜய்யின் மாஸ் மூவ்! பிரசாரக் குழுவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட 10 பேர் நியமனம்!
இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாராளுமன்ற விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டார். இந்தக் குழுவின் விசாரணையை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இரு அவைகளும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு உண்மைக்கு புறம்பானது. அவரை எதிர்த்து எந்த பாரபட்ச நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைக் குழு அமைப்பது முறையானது” என்று தெளிவாகக் குறிப்பிட்டன.
யஷ்வந்த் வர்மா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி, நீதிபதிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தனர்.
இதன்மூலம் பாராளுமன்ற விசாரணைக் குழு தனது பணியை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நீதித்துறை மற்றும் பாராளுமன்ற இடையேயான அதிகார வரம்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அதிரடி தடை! குரோக் ஏஐ.,யில் மாற்றம்!! புதிய கட்டுப்பாடு விதித்தது எக்ஸ்!