×
 
☰

டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனத்தின் தகுதிச் சான்று மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றிலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதுடெல்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிப்பது மட்டுமின்றி, அந்தத் தொகையை முறையாக வசூலிப்பதற்கான நடவடிக்கைகளும் தேவை என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களை வசூலிப்பதற்காக, அவற்றை வாகன உரிமையாளர்களின் மின் கட்டணத்துடன் இணைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பான நீண்டகால வழக்கின் ஒரு பகுதியாக, இ-சலான் வசூல் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இதையும் படிங்க: மம்தாவுக்கு மிகப்பெரிய சவால்? திரிணமூல் பெயர், சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் 4 மாத கெடு!

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஏராளமான இ-சலான்கள் வழங்கப்பட்டாலும், அவற்றில் கணிசமான தொகை வசூலாகாமல் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் ரூ.45,000 கோடி அளவிலான இ-சலான் அபராதம் வசூலிக்க வேண்டியிருந்த நிலையில், சுமார் ரூ.25,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ரூ.20,000 கோடி நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான இ-சலான்களை வழங்குவது மட்டும் போதாது என்றும், விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பதற்கான நடைமுறை வலுவாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அபராதத்தை செலுத்தாதவர்களின் நிலுவைத் தொகையை மின் கட்டணத்துடன் சேர்ப்பது சாத்தியமா என்பதை அதிகாரிகள் ஆராயலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், நிலுவையில் உள்ள இ-சலான் காரணமாக வாகனப் பதிவை புதுப்பிப்பதைத் தடுப்பது, உரிமை மாற்றத்தை அனுமதிக்காதது, வாகனங்களை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளையும் நீதிமன்றம் பரிசீலனைக்கு முன்வைத்தது.

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனத்தின் தகுதிச் சான்று மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றிலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதே நேரத்தில், மின் கட்டணத்துடன் இ-சலானை இணைப்பது குறித்து நீதிமன்றம் தெரிவித்தது பரிசீலனைக்கான யோசனையே தவிர, நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்த புதிய விதி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், எதிர்காலத்தில் நிலுவை அபராதங்களை வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடைமுறையை வகுக்கப் போகின்றன என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share