×
 

நாய்க்கடிக்கு நீங்களே பொறுப்பு! தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆவேசம்!

தெரு நாய்கள் கடித்தால் உணவு வைப்பவர்களே பொறுப்பு என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது காயங்களுக்கு, அந்தந்த உள்ளூர் நிர்வாகங்களும் நாய்களுக்கு உணவு வைப்பவர்களுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளைச் செயல்படுத்தத் தவறிய மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் மீது நீதிபதிகள் தங்களது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தனர். குறிப்பாக, பொது இடங்களில் நாய்களுக்கு உணவு வைப்பவர்களையும் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாக்கப் போவதாக நீதிபதிகள் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது ஆவேசமாகப் பேசிய நீதிபதி விக்ரம் நாத், "கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் எதையும் செய்யாததால், இனி ஒவ்வொரு நாய்க்கடி மரணத்திற்கும், காயங்களுக்கும் மாநில அரசுகளே பெரும் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு, நாய்களுக்குப் பொது இடங்களில் உணவளிப்பவர்களையும் நாங்கள் பொறுப்பாக்குவோம். விலங்குகள் மீது உங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்கக் கூடாது? இந்த நாய்கள் ஏன் தெருக்களில் சுற்றித் திரிந்து மக்களைக் கடிக்க வேண்டும்?" எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாகப் பேசிய நீதிபதி சந்தீப் மேத்தா, "ஒன்பது வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பு? உணவளிக்கும் அமைப்புகளா? இந்தத் துயரங்களுக்கு நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா?" என்று வினவினார்.

இதையும் படிங்க: மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

உள்ளூர் நிர்வாகங்கள் நாய்களைப் பிடிக்கச் செல்லும்போது, ‘நாய் பிரியர்கள்’ என்ற போர்வையில் சிலர் அதிகாரிகளைத் தாக்குவதையும் நீதிபதிகள் வன்மையாகக் கண்டித்தனர். விலங்குகளின் உரிமைகளைப் பற்றிப் பேசும் அதே வேளையில், மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. இன்றைய வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விதிமுறைகளை வகுப்பதற்காக விசாரணையை வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்தத் தீர்ப்புச் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மற்றும் உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சேலத்தில் நிகழ்ந்த படுகொலை... வேட்டையாடும் வன்முறைக் கும்பல்..! திமுகவை தோலுரித்த தவெக…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share