அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!
இந்த மோசடி மூலம் வங்கிகளுக்கு 27,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான திருபாய் அம்பானி குழும நிறுவனங்கள் மிகப் பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு விவகாரத்தில், “விரிவான மற்றும் ஆழமான விசாரணை நடத்த வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மோசடியால் வங்கிகளுக்கு 27,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஈ.ஏ.எஸ். சர்மா தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற த глаவமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு இந்த முக்கிய கருத்தை வெளியிட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “27,337 கோடி ரூபாய் மோசடியில் அனில் அம்பானிதான் மூளையாக செயல்பட்டார் என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இதுவரை அவரை ஏன் கைது செய்யவில்லை? அவர் என்ன புனிதரா?” என கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகள் குறுக்கிட்டு, “விசாரணை முகமைகள் கோராத வரை ஒருவரை கைது செய்ய உத்தரவிட முடியாது. பரபரப்பை ஏற்படுத்துவதை விட, உரிய ஆதாரங்களை திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மோசடி கணக்குகள்!! அனில் அம்பானிக்கு மேலும் பின்னடைவு! ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!!
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், “இதுவரை 9 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14 இடங்களில் சோதனை நடத்தி 3,960 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 லுக் அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
அனில் அம்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “என் கட்சிக்காரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் கூட இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டிருக்கலாம்” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் விசாரணை காலதாமதமின்றி, வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும்” என அறிவுறுத்தினர். விசாரணையில் தொய்வு ஏற்பட்டால் நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு தொழிலதிபர்கள், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!