மாணவர்களுக்குப் போராடும் உரிமை உண்டு, அதனை யாரும் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!
மாணவர்களுக்குப் போராடும் உரிமை உண்டு என்றும் பார் கவுன்சில் அதில் தலையிட முடியாது என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாணவர்களுக்கு எதிராக உத்தரவிட்ட இந்திய பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஜனநாயக முறையில் அமைதியாகப் போராடுவதற்கு மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும், அதனை இந்திய பார் கவுன்சிலால் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக (NALSAR) பட்டமளிப்பு விழாவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தருக்குக் கடிதம் எழுதினர். இதையடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய முடியாது என இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா எச்சரித்ததோடு, நடப்பு 2026-ஆம் ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களை மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யத் தடை விதித்து ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டார். இச்செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் முறையிட்டனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இது எனக்கும் மாணவர்களுக்கும் இடையேயான விவகாரம்; இதில் இந்திய பார் கவுன்சில் ஏன் அநாவசியமாகத் தலையிட்டது?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மாணவர்களுக்கு ஜனநாயக முறையில் போராட உரிமை உண்டு என்றும், தானும் மாணவராக இருந்த காலத்தில் மாணவர் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நேரடியாகத் தனக்கே கடிதம் எழுதலாம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
மேலும், இளம் வயதில் ஒருவர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் அதற்காக அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய வரும் மாணவர்களை உடனடியாகச் சட்ட உதவி மையங்களில் பணியமர்த்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக, ஹைதராபாத் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதோ அல்லது வேறு எந்த தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதோ எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.
இதையும் படிங்க: "சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!