நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் நிராகரித்தது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, நேதாஜியின் கொள்ளுப் பேரன் ஆஷிஷ் ராய் (Ashis Ray) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மார்ச் 12, 2026 அன்று தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த மாபெரும் தலைவரின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவது தான் சரியானது. இந்தியாவின் பல மூத்த தலைவர்கள் ஜப்பான் செல்லும் போது ரென்கோஜி கோயிலுக்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்" என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, "நேதாஜியின் அஸ்தி தற்போது எங்கு உள்ளது? இதை கொண்டு வர கோரும் இந்த மனுவை நேதாஜி குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார். சிங்வி, அஸ்தி ரென்கோஜி கோயிலில் உள்ளது என்றும், நேதாஜியின் மகள் அனிதா போஸ் ப்ஃபாஃப் (84 வயது) திரையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!
ஆனால் நீதிபதிகள், "நேதாஜியின் தியாகத்திற்கு இந்த நீதிமன்றம் தலை வணங்குகிறது. ஆனால் குடும்பத்தில் உள்ள முரண்பாடுகள் தெரிகின்றன. இதே போன்ற மனு கடந்த 2024இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மீண்டும் ஏன் வருகிறது? நேதாஜியின் வாரிசு (மகள்) தாமே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம்" என்று கூறினர்.
இதையடுத்து, மனுதாரர் சார்பில் மனுவை திரும்பப் பெற விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சுப்ரீம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்து, விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
நேதாஜி 1945இல் தைவானில் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது அஸ்தி ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வரும் நிலையில், குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு நேதாஜி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்! அனில் அம்பானி உத்தரவாதம்! சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்!