நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், இன்று (பிப்ரவரி 17, 2026) மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று மிகக் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது. ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இருந்த குளறுபடிகள் குறித்து மத்திய அரசுக்கு டோஸ் கொடுத்த நீதிபதிகள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மாத கால கெடு விதித்துள்ளனர். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் இது தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க நேரிடும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பயணிகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள் எனச் சீறினர். ரயில்வே திட்டங்கள் அனைத்தும் கோப்புகளிலேயே முடங்கிக் கிடப்பதாகவும், நடைமுறையில் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் பாட்னா போன்ற முக்கிய ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், நடைமேடைகளுக்குச் செல்வதே பெரும் சவாலாக இருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
ரயில்வேயில் சாதாரணப் பெட்டிகளில் பயணிக்கும் சாமானிய மக்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வே துறை உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அது செலவிடப்படும் விதம் குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்க இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் திருப்திகரமான பதில் வராவிட்டால் ரயில்வே நிர்வாகம் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!