ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்.. இடைக்கால அரசை வழிநடத்தப்போவது யார்..??
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதிவியை ராஜினாமா செய்ததையடுத்து, நாடு ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
நேபாளத்தில் அரசு விதித்த சமூக ஊடகத் தடையை எதிர்த்து தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் கடுமையான கலவரமாக உருவெடுத்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை, உள்நாட்டு சட்டங்களை மீறியதாகக் கூறி, அரசு தடை செய்தது. இதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டனர். ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மற்றும் அரசின் சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பற்றி எரிந்த பிரபல ஹில்டன் ஹோட்டல்..!!
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) தொடங்கிய இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டு, சிலவற்றுக்கு தீ வைக்கப்பட்டன.
இதில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயில் அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார். காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதோடு, நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகமும் எரிக்கப்பட்டது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டக் குழுவினருடனான ஆன்லைன் பேச்சுவார்த்தையில், 73 வயதான சுசிலா கார்கி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 2016-2017இல் பதவி வகித்து வரலாறு படைத்தவர் இவர். ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற இவர், இந்தியாவின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நாட்டின் நலனுக்காக இப்பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், சுசிலா கார்கி இந்தப் பொறுப்பை முறையாக ஏற்பாரா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா மற்றும் முன்னாள் மின்சார வாரியத் தலைவர் குல்மான் கிசிங் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன. ராணுவக் கட்டுப்பாட்டால் நாட்டில் அமைதி திரும்பியுள்ள நிலையில், திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுசிலா கார்கி பொறுப்பேற்றால், நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக வரலாறு படைப்பார்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!