இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... 60 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதிய சி.எம். விஜய்... எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...!
இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு 3 திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று அலுவல் பணிகளையும் மேற்கொண்டார். சட்டப்பேரவை அதிகாரிகள், துறை செயலாளர்களை சந்தித்தார். அதனையடுத்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
இதனிடையே, 2026-ம் ஆண்டு தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். 17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், ஜார்ஜ் கோட்டை வளாகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. கடந்த 60 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் தலைமை ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
இன்று சட்டப்பேரவையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கவுள்ளனர். தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா, புதிய எம்.எல்.ஏக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். முதலமைச்சர் விஜய் தனது உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சரவை உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரிசையாகப் பதவியேற்பார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு இன்று நிறைவடைய உள்ள நிலையில், நாளை புதிய சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!