×
 

பிரசவ வார்டு அருகே சரக்கு பார்ட்டி?! இப்படியுமா இருக்கும் டாக்டர் ரூம்? 4 பேர் சஸ்பெண்ட்!

கடந்த 31ம் தேதி பணியில் இருந்த டாக்டர்கள் 4 பேர் மது அருந்தியது உறுதியானது. பார்மசி பணியாளர் கமலக்கண்ணன் அவர்களுக்கு உதவியது தெரியவந்தது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு தினத்தன்று பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வரும் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு டாக்டர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு விபத்தில் காயமடைந்த தயாளன் என்ற இளைஞரை அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் இல்லை. தயாளனின் நண்பர்கள் பிரசவ வார்டு, அவசர சிகிச்சை அறை உள்ளிட்ட இடங்களில் தேடினர். 

அப்போது டாக்டர்கள் ஓய்வு அறைக்கு அருகே சென்றபோது, அங்கு மது பாட்டில்கள், அசைவ உணவு, நொறுக்கு தீனிகள் சிதறிக் கிடந்ததை கண்டனர். இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இதையும் படிங்க: இதெல்லாம் நீங்க சொன்னதுதானே முதல்வரே?! ஸ்டாலின் அறிக்கையால் செக் வைக்கும் டாக்டர்கள்!

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் டிசம்பர் 31ஆம் தேதி பணியில் இருந்த நான்கு டாக்டர்களும் மது அருந்தியது உறுதியானது. பார்மசி பணியாளர் கமலக்கண்ணன் அவர்களுக்கு உதவி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஐந்து பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதே நாளில் பணியில் இருந்த நர்ஸ்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மது அருந்தியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தொடரும் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: நாங்க பாவமில்லையா? மயானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share