சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் எடுத்த முடிவு!
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவரை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டில் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றப்பத்திரிகையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் மரிய வில்சன்! உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி! நடந்தது என்ன?
இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி அவரது தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் அஜீத்குமார் ஆஜராகி, லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து அமைச்சரை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறி, கெரோலின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரிய வில்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கெரோலின் தரப்பு வழக்கறிஞர் பிரேம்குமார் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புக்குள் வராது என வாதிட்டார்.
இரு தரப்பினரின் மனுக்கள் மீதான விசாரணையையும் வரும் 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். அன்று இந்த மனுக்கள் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!