தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!
தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை விற்பனையாகும் சூழல் உருவாகலாம் என்றும் அரிசி ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகள் திருப்பி அனுப்பப்படுவதால், எதிர்காலத்தில் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என நெல் வியாபாரிகள், கமிஷன் ஏஜன்டுகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை விற்பனையாகும் சூழல் உருவாகலாம் என்றும் அரிசி ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முக்கியமாக நடைபெறுகிறது. இங்கு விளையும் நெல், அரசின் ரேஷன் திட்டத்துக்காக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெல் சாகுபடி கணிசமாக நடக்கிறது.
குறிப்பாக சன்னரக நெல் உற்பத்தி தமிழகத்தின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சன்னரக நெல் தமிழகத்திற்கு வரவழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!
தமிழக அரிசி ஆலைகள் இந்த நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக மாற்றி, உள்ளூர் தேவைக்கும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திலும் விலை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து செங்குன்றம் பகுதிக்கு விற்பனைக்காக வரும் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரிகள் மற்றும் டிராக்டர்கள் சில நாட்களாக திருப்பி அனுப்பப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
வெளிமாநில நெல்லை முழுமையாக தடுக்காமல், அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை மட்டும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனைக்காக வரும் நெல் மூட்டைகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் நெல் வரத்து குறைந்து, அடுத்த கட்டமாக அரிசி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!