×
 
☰

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

திருச்சி தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் 'ரெட் அலர்ட்' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அக்டோபர் 26-ஆம் தேதி காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும், 27-ஆம் தேதி தீவிரப் புயலாகவும் மேலும் வலுப்பெறக்கூடும்.

பின்னர், மிக தீவிரப் புயலாக உருவெடுத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோரப் பகுதிகள் வரை வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடிக்கிறது.

இதையும் படிங்க: மழை பிச்சு உதறப்போகுது.!! நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! 24 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

இதன் காரணமாக, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ மழையும், நெடுங்குணத்தில் 18 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ளவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இதோ வந்தாச்சுல்ல..! வெளுக்க போகுது மழை..! வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்...! வானிலை மையம் அலர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share