தவெக-வில் கூட்டணிக்கு கேட் போடும் ரெண்டு பேர்! விஜய் முடிவுக்கே சம்மதம் கிடைக்காத குறை!
த.வெ.க.வில் 90% மாவட்ட செயலர்கள் கூட்டணிக்கு ஆதரவு: பாஜகவுடன் இணைவதா? விஜய் முடிவெடுக்கும் நிலையில் கட்சியில் உள் பதற்றம்!
சென்னை: தமிழக வெற்றிக் கட்சி (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் அரசியல் களத்தில் முடிவெடுக்கும் முக்கிய தருணத்தில் கட்சியில் உள் பதற்றம் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ‘தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி வைக்கலாமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட செயலர்கள் கூட்டணி வைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் விஜய் எடுக்கும் இறுதி முடிவுக்கு தங்களை ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாநில நிர்வாகிகளின் கருத்தையும் விஜய் கேட்டறிந்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் ‘கிளைமேக்ஸ்’ நெருங்கி வரும் நிலையில், விஜயை தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க விடாமல் தடுப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இதற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, த.வெ.க. இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக – அதிமுக – சசிகலா – ராமதாஸ் உள்ளிட்டோருடன் த.வெ.க. கூட்டணி பேச்சு நடப்பதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!
“எந்த கட்சியுடனும், எந்த மட்டத்திலும் எவ்வித பேச்சும் நடைபெறவில்லை. இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை திமுகவினர் தொடர்ந்து பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விஜய் எடுக்கும் முடிவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தனித்து நின்று போட்டியிடுவதா? அல்லது பாஜக உள்ளிட்ட தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பதா? என்பது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவாக இருக்கும். மாவட்ட செயலர்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்தபோதிலும், மேல்மட்டத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பு விஜயின் முடிவை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
இந்த உள் முரண்பாடுகள் மற்றும் கூட்டணி விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரூ.5 கோடி இல்லையே! கைவிரித்த நிர்வாகிகள்! கூட்டணியை நோக்கி விஜய் நகர இதுதானா காரணம்!