ட்ரபிள் என்ஜினை வச்சுக்கிட்டு! டபுள் என்ஜினை பேசலாமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை!
டப்பா என்ஜின் தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் ‘டபுள் என்ஜின்’ அரசு குறித்து ‘டப்பா என்ஜின்’ என விமர்சித்ததற்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழிசை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், ஸ்டாலின் அரசை ‘ட்ரபிள் என்ஜின்’ (Trouble Engine) என கிண்டலடித்துள்ளார், இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் பாஜக-என்டிஏ கூட்டணியின் ‘டபுள் என்ஜின்’ அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும் என தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் என்ஜின்’ எனும் ‘டப்பா என்ஜின்’ தமிழ்நாட்டில் ஓடாது” என கூறியிருந்தார். இந்த விமர்சனம் பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழக முதல்வர் ஸ்டாலின், நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (Trouble Engine) அரசை வைத்துக்கொண்டு, எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் என்ஜின் அரசை நடத்திக்கொண்டிருக்கும் மோடியை விமர்சிக்கிறீர்கள்.
இதையும் படிங்க: அரசியல் ஆட்டத்தில் கேம் சேஞ்சர் தேமுதிக!! எவ்வளவு தொகுதி? எந்த கூட்டணி? பிரேமலதா டிஸ்கஷன்!
குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியைத் தருவது மட்டுமல்லாமல், மாநகராட்சி அளவிலும் வெற்றியைத் தந்து, அது ட்ரிபிள் என்ஜின் (Triple Engine) அரசாக போய்க்கொண்டிருக்கிறது.”
மேலும், “ஆனால், பஞ்சாயத்து தேர்தலைக் கூட நடத்த பயந்து, தமிழ்நாட்டில் ட்ரபிள் என்ஜின் (Trouble Engine) அரசாக, போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஓட்டிக்கொண்டிருக்கும் உங்கள் அரசு போல் அல்லாமல்... தமிழ்நாட்டில் நல்ல டபுள் என்ஜின் அரசு கொண்டுவர வேண்டுமென்றால், அதை ‘டப்பா என்ஜின்’ என்று விமர்சிக்கிறீர்கள்.
நீங்கள் தான் ‘தப்பான என்ஜினை’ வைத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள் முதல்வரே... தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம், உங்கள் ட்வீட்டில் நன்றாகவே தெரிகிறது” என கடுமையாக சாடியுள்ளார்.
இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, பாஜக ஆதரவாளர்கள் மற்றும் திமுக தரப்பினரிடையே கடும் விவாதத்தை தூண்டியுள்ளது. பாஜக தரப்பில், மோடி அரசின் வெற்றிகளை பட்டியலிட்டு ஸ்டாலினை விமர்சிக்கும் பதிவுகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், திமுக ஆதரவாளர்கள், ‘டப்பா என்ஜின்’ விமர்சனத்தை ஆதரித்து, மத்திய அரசின் தமிழகத்திற்கான ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசியல் வட்டாரங்களில், இந்த வார்த்தைப் போர் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. பாஜக தமிழகத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் நிலையில், திமுக இதனை எதிர்கொள்ளும் விதம் கவனம் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் மருமகனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி?!! திமுகவில் நடக்கும் திடீர் ஆலோசனை!! கூட்டணிக்கும் சலசலப்பு!