×
 

வங்கதேசத்துகாக என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு!! 17 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் மகன் பேச்சு!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சி செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பி உள்ளார்.

டாக்கா: வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) செயல் தலைவரும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தாயகம் திரும்பினார். பிரிட்டனில் தஞ்சம் அடைந்திருந்த அவர், மனைவி ஜூபைதா, மகள் ஜைமா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் விமானம் மூலம் டாக்காவுக்கு வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் தாரிக் ரஹ்மானை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து புர்பாச்சல் பகுதியில் உள்ள 'ஜூலை 36 எக்ஸ்பிரஸ்வே' என்ற இடத்துக்கு சென்ற அவர், திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது: “வங்கதேசத்துக்கு 1971ஆம் ஆண்டு ஒரு விடுதலை கிடைத்தது. 2024ஆம் ஆண்டு மாணவர்களின் எழுச்சியால் இரண்டாவது விடுதலை கிடைத்துள்ளது. வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. மக்களின் ஓட்டுரிமையும் அடிப்படை உரிமைகளும் நிலைநாட்டப்படும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! ஓயாத அழுகுரல்!! டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி!

அனைத்து சமூகங்களையும் இனக்குழுக்களையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்றும், அமெரிக்க உரிமை ஆர்வலர் மார்டின் லூதர் கிங்கின் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற பேச்சை நினைவுகூர்ந்த தாரிக் ரஹ்மான், “என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. நாட்டில் அமைதி, ஒழுக்கம், அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வர பிஎன்பி அயராது பாடுபடும்” என்று உறுதி அளித்தார்.

கடந்த ஆண்டு மாணவர் புரட்சியால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎன்பி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

தாரிக் ரஹ்மான் முந்தைய அரசில் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்பினார். உரையாற்றிய பிறகு, பலத்த பாதுகாப்புடன் எவர்கேர் மருத்துவமனைக்கு சென்ற அவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் தாய் கலிதா ஜியாவைப் பார்த்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். முன்னதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸைச் சந்தித்து பேசினார்.

தாரிக் ரஹ்மானின் திரும்புதல் வங்கதேச அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! ஓயாத அழுகுரல்!! டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share