சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!
டாடா சன்ஸ் விதிமுறைகளின்படி, தலைவர் தேர்வு ஐந்து பேர் கொண்ட குழுவின் மூலம் நடைபெறும். இதில் மூன்று உறுப்பினர்கள் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றால் கூட்டாக பரிந்துரைக்கப்படுவார்கள்.
மும்பை: டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு தொடர்ந்து பதவியில் இருக்க விரும்பவில்லை என அறிவித்துள்ள நிலையில், அடுத்த தலைவராக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டி.வி. நரேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2017 முதல் டாடா சன்ஸ் தலைவராக செயல்பட்டு வரும் சந்திரசேகரன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து விலக உள்ளார். அடுத்த தலைவரை விரைவாக தேர்வு செய்யுமாறு டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், புதிய தலைவர் பொறுப்பேற்க 2027 பிப்ரவரி வரை அவகாசம் இருப்பதால், அடுத்த தலைவரை தேர்வு செய்ய டாடா குழுமத்துக்கு போதிய கால அவகாசம் உள்ளது.
டாடா சன்ஸ் விதிமுறைகளின்படி, தலைவர் தேர்வு ஐந்து பேர் கொண்ட குழுவின் மூலம் நடைபெறும். இதில் மூன்று உறுப்பினர்கள் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றால் கூட்டாக பரிந்துரைக்கப்படுவார்கள். ஒருவர் டாடா சன்ஸ் வாரியத்தால் நியமிக்கப்படுவார். மற்றொரு உறுப்பினர் வாரியத்தால் தேர்வு செய்யப்படும் சுயாதீன இயக்குநராக இருப்பார்.
இதையும் படிங்க: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிரடி முடிவு: 2027ல் பதவி விலகல்; பின்னணி என்ன?
இதற்கிடையே, டாடா சன்ஸ் இயக்குநரும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவருமான நோயல் டாடா இடைக்காலமாக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆனால், டாடா குழும கொள்கையின்படி நிர்வாகம் சாராத இயக்குநர்களுக்கு 70 வயது ஓய்வு வரம்பு உள்ளது. அந்த வகையில், நோயல் டாடா வரும் நவம்பரில் பெரும்பாலான டாடா குழும நிறுவனங்களின் இயக்குநர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார். எனினும், அறக்கட்டளை பிரதிநிதி என்ற அடிப்படையில் டாடா சன்ஸ் இயக்குநராக அவர் தொடர முடியும் என கூறப்படுகிறது.
யார் இந்த நரேந்திரன்?
டாடா சன்ஸ் அடுத்த தலைவர் பதவிக்கான முக்கிய பெயர்களில் ஒருவராக கூறப்படும் டி.வி. நரேந்திரனுக்கு தற்போது 61 வயது. 1988-ம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த அவர், தனது முழு தொழில் வாழ்க்கையையும் டாடா ஸ்டீல் நிறுவனத்திலேயே கழித்துள்ளார்.
திருச்சி என்.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் படித்த நரேந்திரன், கொல்கத்தா ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட இவர், 2013 முதல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
எனினும், நரேந்திரன் அடுத்த டாடா சன்ஸ் தலைவராக உறுதி செய்யப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவரது பெயர் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக பேசப்படுவதாக மட்டுமே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவு தேர்வுக்குழு மற்றும் டாடா சன்ஸ் வாரியத்தின் நடவடிக்கைகளுக்குப் பிறகே தெரியும்.
இதையும் படிங்க: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிரடி முடிவு: 2027ல் பதவி விலகல்; பின்னணி என்ன?