விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!
தெலங்கானா மாநிலத்தில் விநாயகர் சிலை விசர்ஜனத்தில் நீரில் முழ்கி ஆறு மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் மூன்று நாட்களாக மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், படஞ்சேரு மண்டலம், பெத்தகஞ்சல்லா கிராமத்தில் உள்ள சிரிஷா அறக்கட்டளையில் சுமார் 70 ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்கள் தங்கியுள்ளனர். விநாயாகர் சதுர்த்தியை ஒட்டி ஆசிரமத்தில் வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலைகளை புதன்கிழமை மாலை ஆசிரமத்திற்கு அருகிலுள்ள நேரேடு குளத்திற்கு சிலையை கரைப்பதற்காகச் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
8 மாணவர்கள் சிலையை கரைப்பதற்காக குளத்திற்குள் இறங்கினர். அப்போது வாரங்கல் மாவட்டம், பாலய்யப்பள்ளியைச் சேர்ந்த கணேஷ் (18) சிலையை தலையில் சுமந்து சென்றபோது, இதற்கு முன்பு செங்கல் சூளைகளுக்காக தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் சிக்கி நீரில் மூழ்கினார். மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முன்னே சென்றனர்.
இதில் அடுத்தடுத்து குக்கட்பள்ளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரான ஷியாம்குமார் (17), பீமவரத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு டிப்ளமோ மாணவரான நரசிம்மராஜு (21), பத்ராசலத்தைச் சேர்ந்த சுமந்த் ரெட்டி (17), வாரங்கல் மாவட்டம் பாலய்யப்பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான சித்தார்த்தா (17), மற்றும் குக்கட்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரான உதயகிரண் (22) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?
நீந்திக்கொண்டிருந்த மற்ற இரண்டு மாணவர்கள் உயிர் தப்பி, ஆசிரம ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவர்களை வெளியே எடுத்து, இந்திரஷத்தில் உள்ள பிராச்சின் குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஏற்கெனவே ஐந்து பேர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதுவரை ஆடியும் பாடியும் காணப்பட்ட மாணவர்கள் சடலங்களாக மாறியதால், மருத்துவமனை வளாகத்தில் சோகமான சூழல் நிலவியது.
இந்த தகவல் அறிந்த ஏசிபி சீனிவாச ராவ், அப்பகுதி எம்எல்ஏ மஹிபால் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி தொகுதி பொறுப்பாளர் ஆதர்ஷ் ரெட்டி மற்றும் பலர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக படஞ்சேரு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்ற போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!