திருவனந்தபுரத்தில் 50 இடங்களை தட்டி தூக்கிய பாஜக..! வரலாற்று திருப்புமுனை என பிரதமர் மோடி பெருமிதம்...!
திருவனந்தபுரத்தில் பாஜக மகத்தான வெற்றியை பெற்றிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் 101 வார்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி 29 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளா உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மகத்தான வெற்றியை உறுதி செய்த, மக்களிடையே அயராது உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் நன்றிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்றைய இந்த வெற்றி நிஜமாகியதற்கு அடித்தளமாக இருந்த, கேரளாவில் தரைமட்ட அளவில் உழைத்த தலைமுறை தலைமுறையான தொண்டர்களின் உழைப்பையும் தியாகங்களையும் நினைவுகூரும் நாள் இது என்றும் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ பெற்ற இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை எனவும் கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்றும் தங்கள் கட்சி இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு... உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு...!
மேலும், மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரளா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கேரளாவுக்கு யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் கட்சிகள் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் செழிப்பான கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே விருப்பமாக என்டிஏ-வை அவர்கள் பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!