மிரள வைக்கும் உண்டியல் காணிக்கை! ஏழுமலையான் சந்நிதியில் குவிந்த பக்தர்கள்! நாளை முதல் இலவச தரிசனம்!
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முதல் இரண்டு நாட்களில் 1.37 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், ₹7.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் தரிசனத்தில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1.37 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் காணிக்கை மூலம் உண்டியல் வருவாய் ₹7.04 கோடியைக் கடந்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கடந்த 30-ஆம் தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வரும் நிலையில், நாளை (ஜனவரி 2) முதல் இலவச டோக்கன்கள் இன்றி நேரடியாக வரும் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக இன்று இரவு முதலே வரிசைகளில் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ள அதிகாரிகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காத்திருப்பு நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும் முதன்முறையாக ‘ஏ.ஐ.’ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திராமல் திட்டமிட்டுத் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசியன்று 67,053 பக்தர்களும், இரண்டாம் நாளான வைகுண்ட துவாதசியன்று 70,256 பக்தர்களும் என மொத்தம் 1,37,309 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ₹7.04 கோடி வசூலாகியுள்ளது; மேலும் 41,043 பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளனர். சொர்க்கவாசல் தரிசனம் வரும் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரை ஆன்லைனில் குலுக்கல் முறையில் டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!
நாளை முதல் (ஜனவரி 2) சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கும் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்கள் அனைவரும் நேரடியாக இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக இன்று இரவு முதலே பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் கூட்டத்தை மேலாண்மை செய்ய, வரிசைகள் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு பக்தர் சாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பது துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அங்கங்கே உள்ள டிஜிட்டல் திரைகளில் அறிவிக்கப்படும்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பால், காபி, தேநீர் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது. “பக்தர்கள் பொறுமையுடன் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 15,000 வீதம் ₹300 சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்வ தரிசன பக்தர்களுக்கான அனுமதி நாளை முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!