திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் குறித்த முக்கிய தகவல்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
24 மணி நேரமான காத்திருப்பு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து உள்ளது. இந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 74 ஆயிரத்து 636 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ 3.18 கோடி காணிக்கையாக செலுத்தினர். மேலும் சாதனை அளவாக ஒரே நாளில் 43 ஆயிரத்து 084 பக்தர்கள் சுவாமிக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். 4.21 லட்சம் லட்டுகளை பக்தர்கள் பெற்று சென்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு அடுத்த தலைவலி... கட்சிக்காக மின் கம்பியில் கொக்கி போட்ட குமாரு... தவெகவை அசிங்கப்படுத்திய நிர்வாகி...!
தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத மையம், மற்றும் வரிசைகள், வைகுண்டம் க்யூ காம்பளக்ஸ், முக்கிய சந்திப்புகளில் உள்ள உணவு கவுண்டர்களில் காலை, மதியம், இரவு என 3.18 லட்சம் பக்தர்கள் உணவு வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, திருமலை தேவஸ்தானம் தொடர்ந்து அன்னபிரசாதம், பால், மோர், குடிநீர் உள்ளிட்டவை சாமி தரிசனத்திற்கான வரிசைகளில் வழங்கி வருகின்றனர்.
பக்தர்கள் தங்கும் இடங்களில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 6 மணி நேரமும், திருப்பதியில் இரவு 12 மணிக்கு வழங்கப்படும் சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 7 மணி நேரம் காத்திருக்க கூடிய நிலையில் இலவச தரிசனத்திற்கான வரிசைகள் ஆக்டோபஸ் கமொண்டா படை அலுவலகம் வரை 3 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் உள்ளதால் 24 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனவே வரிசையில் உள்ள பக்தர்கள் பொறுமையுடன் தேவஸ்தானத்துடன் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தரிசன டிக்கெட் ஒதுக்கீடு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்கூட்டியே
தங்கள் ஆன்மீக பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த மூன்று மாதங்களுக்கு முன்பே தரிசனம், சேவைகள், அறைகள் முன்பதிவு செய்ய ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அவ்வாறு செப்டம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவைகளான (சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை போன்ற சேவைகளுக்காக ) குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்க ஜூன் 18 அன்று காலை 10 மணிக்கு முதல் ஆன்லைனில் தொடங்கப்பட்டு 20-ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம்.அதன் பிறகு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெறலாம்.
இதேபோன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கர சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் நேரடியாக முன்பதிவு செய்யலாம். இதே சேவைகளுக்கான விர்சுவல் சேவை டிக்கெட் மூலம் சாமி தரிசனத்திற்கு மட்டும் 22ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
அங்கபிரதட்சனை செய்வதகான இலவச டோக்கன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவானி அறக்கட்டளைக்கான ரூ 10,500 செலுத்தி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு தரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகள் பெற 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சாமி தரிசனத்திற்கான டிக்கெட்கள், அர்ஜித சேவைகள் மற்றும் அறைகள் பெற தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையத்தளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என போலி இணையத்தில் மற்றும் தெரியாத நபர்களிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!