திருப்பதி செல்ல திட்டமா? டிசம்பர் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தேதிகள் அறிவிப்பு! பக்தர்கள் தவறவிடக்கூடாத முக்கிய தகவல்கள்!
பக்தர்கள் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான பல்வேறு சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகளுக்கான முன்பதிவு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 19-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கு செப்டம்பர் 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்யலாம். பின்னர் மின்னணு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள், செப்டம்பர் 21 முதல் 23-ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. சேவையில் பங்கேற்காமல் சாமி தரிசனம் மட்டும் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்டுகள் அன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.
அங்கபிரதட்சணைக்கான இலவச டோக்கன்கள் செப்டம்பர் 23-ம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் செப்டம்பர் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகும்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 24-ம் தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தங்குமிட அறைகளுக்கான முன்பதிவு அன்று மாலை 3 மணிக்கும் ஆன்லைனில் தொடங்கும்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!