×
 

பணத்தை இழந்துடாதீங்க... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் விடுத்த எச்சரிக்கை...!

பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் எச்சரித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், சின்னம் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளைப் போலியாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு எனக் கூறி, போலி இணையதளங்கள் மூலம் பக்தர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவஸ்தானத்தின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் சிலர் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுவது போன்று போலியான கணக்குகளை உருவாக்கி வருகின்றனர். தரிசன டிக்கெட், தங்குமிடம், ஆர்ஜித சேவை உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, பக்தர்களிடம் ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களே... ஹாப்பி நியூஸ்.!! ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு..!

இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்குமிடங்களை முன்பதிவு செய்ய வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான TTDevasthanams மூலமாகவும் சேவைகளைப் பெறலாம்.

குறிப்பாக, கூகுளில் தேடும்போது முதலில் வரும் இணையதளமே தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று கருதிவிடக்கூடாது. தேவஸ்தானத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் பக்தர்களிடம் ஆன்லைனில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

அதேபோல், வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “உடனடி தரிசன டிக்கெட்”, “விஐபி தரிசனம்”, “அறை முன்பதிவு”, “சிறப்பு தரிசனம்” போன்ற பெயர்களில் வரும் தகவல்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாமல் விஐபி தரிசனம் பெற்றுத் தருவதாகவும், உடனடியாக தரிசன டிக்கெட் அல்லது தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறும் முன்பின் தெரியாத நபர்களையும் இடைத்தரகர்களையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமூக வலைதளங்கள் வாயிலாக தனிப்பட்ட முறையில் பணம் கேட்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தேவஸ்தானத்தின் பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, பக்தர்களிடம் பணம் கேட்கப்பட்ட சம்பவங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி கணக்குகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பக்தர்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான இணையதளம், தொலைபேசி அழைப்பு, வாட்ஸ்அப் செய்தி அல்லது பணம் கேட்கும் நபரை எதிர்கொண்டால் உடனடியாக தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தேவஸ்தானத்தின் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை மட்டுமே நம்ப வேண்டும்.

முக்கியமாக, வாட்ஸ்அப்பில் வரும் தகவல் உண்மையானது என்று கருதி எந்தவொரு இணைப்பையும் திறந்து பணம் செலுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது TTDevasthanams செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்வதே பாதுகாப்பானது.

பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜார்க்கண்டில் நக்சலைட் வேட்டை! ரூ.1 கோடி சன்மானம் பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் கைது! 103 பேர் சுற்றிவளைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share