பக்தர்களுக்கு இலவச தரிசனம்... திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும் தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார இறுதி நாள் விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் 3 கிலோ மீட்டர் தொலைவு அக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அலிபிரி மலைப்பாதையிலும் வேண்டுதலின்படி பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. வாகனங்கள் செல்லும் அலிபிரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதால் நீண்ட நேர சோதனைக்கு பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு முதலமைச்சர் இப்படியா பண்ணுவீங்க? உமர் அப்துல்லாவுக்கு நடந்தது வெட்கக்கேடான விஷயம்! மம்தா கடும் தாக்கு..!
வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், திருமலையில் முக்கிய இடங்களில், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்திலும் வரிசைகளில் தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை 92 ஆயிரத்து 221 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ₹ 3.51 கோடி காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பொறுமையாக இருந்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!