×
 

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள மக்களவைத் தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸைக் கண்டித்தும், வடசென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் படம் பொறித்த கருப்பு பலூன்களை உடைத்து அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைச் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாகத் திருவொற்றியூரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாதரம்மா கனி தலைமையில் நடைபெற்ற இப் பேரணியில், காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. செல்லக்குமார் கலந்துகொண்டார். திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் இருந்து கைகளில் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த கருப்பு பலூன்களை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தின் நிறைவாகத் திருவொற்றியூர் காந்தி சிலை முன்பாகத் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடியின் உருவம் பொறித்த கருப்பு பலூன்களை உடைத்தும், பிரதமர் மோடியின் படம் பொறித்த பேனர்களைக் கிழித்தும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுச் சிறப்புகளை அன்புமணி ராமதாஸ் தனது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் இயக்கம் எதற்கும் அஞ்சாத இயக்கம். தமிழகத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சும் பேசி வரும் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறிப் பேசினால் அவரைத் தமிழ்நாட்டில் நடமாட விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லக்குமார் தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டங்களில் பங்கேற்பார்கள். எவரெல்லாம் தங்களின் பதவி சுகத்திற்காகவும், தாங்கள் செய்த ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் பயப்படுகிறார்களோ, அவர்களே மோடி அரசுக்குச் சிக்னல் கொடுப்பதற்காக இத்தகைய ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணிக்கிறார்கள். தமிழ் உணர்வும் சுயமரியாதையும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் இத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கடுமையாக எதிர்ப்பான் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share