காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம்.. தமிழக அரசு வலியுறுத்தியது என்ன..??
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு செப்டம்பர் மாத நீர் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 43-வது கூட்டம் இன்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். முக்கியமாக, தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய நீர் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 93.470 டி.எம்.சி.யாக உள்ளதாகவும், அணைக்கு இப்போது வினாடிக்கு 7,684 கன அடி நீர் வரத்து பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், விவசாயம், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக வினாடிக்கு 12,850 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செப்டம்பரில் ட்ரம்பை சந்திக்கிறார் மோடி!! வரி விதிப்பிற்கு வருமா எண்டு கார்டு?
தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தின் 2007 தீர்ப்பின்படி, கர்நாடகம் பிலிகுண்டுலுவில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் நீர் இருப்பு மற்றும் வரத்து கணிசமாக இருப்பதால், உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருப்பதாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பை உறுதி செய்ய ஆணையம் கர்நாடகாவை வலியுறுத்தியது. இருப்பினும், கர்நாடக அதிகாரிகள் நீர் திறப்பு குறித்து முழு உடன்பாடு தெரிவிக்கவில்லை, இதனால் விவாதங்கள் தீவிரமடைந்தன.
மேலும் மழைக்காலங்களில் கர்நாடகம் விடுவித்த உபரி நீரை, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் தமிழகம் திட்டவட்டமாக தெரிவித்தது. கூட்டத்தில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், நீர் விநியோகத்தை கண்காணிக்கவும், ஆகஸ்ட் இறுதியில் நடைபெறவுள்ள காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரைகளை விவாதிக்கவும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், நீர் விநியோகம், அணைகளின் நீர் இருப்பு, மற்றும் மழை அளவு குறித்த தொழில்நுட்ப அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நீர் ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்தது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் தமிழக விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
இதையும் படிங்க: இனி வாட்ஸ் அப்-யிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறலாம் - எப்படி தெரியுமா?