மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர முனைப்புடன் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள வாக்காளர் உள்கட்டமைப்பைச் சீரமைக்கும் விதமாக, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் நோக்கம், இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதன் மூலம் ஒரு தகுதியான பட்டியலை உருவாக்குவதாகும்.
தற்போதைய நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில், இதில் இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழக அரசியலின் கள நிலவரத்தை இந்தத் திருத்தப் பணி அதிநவீனத் துல்லியத்துடன் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய SIR பணிகளுக்கான காலக்கெடு முதலில் டிசம்பர் 4 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், விரிவான களப் பணிகளுக்காக இந்தக் காலக்கெடு டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, வாக்குச்சாவடியில் விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களில் 99.55% படிவங்கள் (டிச.9) நேற்றைய நிலவரப்படி பதிவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில படிவங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், மீதமுள்ள வாக்காளர்களும் தங்களது படிவங்களைச் சமர்பிக்க நாளை (டிசம்பர் 11) இறுதி நாள் என்பதால், இதுவே கடைசி வாய்ப்பு என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, சுமார் 25 லட்சம் பேர் இறந்தவர்கள் என்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் என்பதும் களப் பணியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி அச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, நேற்றுவரை 6 கோடி 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 6 கோடி 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,88,710 படிவங்களையும் விரைந்து சமர்ப்பிக்கும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பின்னர், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்காக, டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை திருத்த வாய்ப்பு வழங்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதன் பின்னர், பெறப்படும் விண்ணப்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் பணிச்சுமை: உத்தரப் பிரதேச ஆசிரியர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை!