கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்! கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!
'கர்நாடக வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றேன்' என, மாவோயிஸ்ட் வசந்த், கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ரகசிய நெட்வொர்க் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வசந்த் (37) என்பவரை தமிழக கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது.
வசந்த் கூறியதாவது: “நான் பொறியியல் படித்தவன். 16 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரை அறிமுகம் செய்து கொண்டேன். அவரது தந்தை வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராகவேந்திராவும் நானும் அடிக்கடி சந்தித்து அரசியல் பேசினோம்.
அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தினார். ராகவேந்திரா தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி செயல்பட்டார். அவர் எனக்கு ரகசியமாக ஆயுதப் போராட்டம் குறித்து வகுப்பு எடுத்தார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறி கேரள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார்.”
இதையும் படிங்க: தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!
“2010இல் நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். தேனி மாவட்டம் பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார், ஷர்மிளா உள்ளிட்ட மாவோயிஸ்ட்டுகளின் நட்பு கிடைத்தது. அவர்கள் ஏற்கனவே ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி கர்நாடக வனப்பகுதியில் நானும் ஆயுதப் பயிற்சி பெற்றேன்.
2021இல் கேரள வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி அளித்த ராகவேந்திரா அம்மாநில போலீசாரிடம் சிக்கினார். அதன்பின் நாங்கள் சிதறுண்டோம். பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் தமிழக கியூ பிரிவால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நானும் ஐந்து மாவோயிஸ்ட்டுகளும் கர்நாடக முதல்வர் சித்தராமையா முன் சரணடைந்தோம். பின்னர் கேரள சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று வசந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக – கர்நாடக – கேரள மாவோயிஸ்ட் நெட்வொர்க் குறித்து கியூ பிரிவு போலீசார் ஆழமான விசாரணை நடத்தி வருகின்றனர். ராகவேந்திரா மற்றும் பிற முக்கிய நபர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தின் தென்னிந்திய அமைப்பு மீண்டும் கட்டமைக்கப்படுவதற்கான சாத்தியம் குறித்து போலீசார் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை மீண்டும் உயர்த்தியுள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!