நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசுத் தலைவரை சந்தித்து முறைபடி அனுமதி பெற்றார். அப்போது குடியரசுத் தலைவர், நிதியமைச்சருக்கு தயிர்-சர்க்கரை ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து முறைப்படி அனுமதி பெற்றார். குடியரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பு, பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகப் பின்பற்றப்படும் நீண்டகால மரபாகும்.
இன்று காலை 9:15 மணியளவில் ராஷ்டிரபதி பவன் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயத்தின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி, பட்ஜெட் சிறப்பாக அமையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் நாடாளுமன்றம் வந்தடைந்த நிதியமைச்சர், காலை 10:15 மணிக்குத் தொடங்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 2026 பட்ஜெட்டிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. முன்னதாகத் தனது இல்லத்திலிருந்து நிதியமைச்சகத்திற்கு வந்த நிதியமைச்சர், அங்கிருந்து பட்ஜெட் ஆவணங்கள் அடங்கியச் சிவப்பு நிற உறையிடப்பட்ட டிஜிட்டல் டேப்லெட்டுடன் (Bahi-Khata) செய்தியாளர்களுக்குப் போஸ் கொடுத்தார். இது அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9-வது பட்ஜெட் என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்ற பெருமையையும் பெறுகிறது.
இதையும் படிங்க: 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்..!!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை இன்னும் சற்று நேரத்தில், அதாவது காலை 11 மணிக்குத் தொடங்கவுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வரி செலுத்துவோருக்கானச் சலுகைகள் குறித்து அவர் என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: பெண்கள் மற்றும் இளைஞர்களே நாட்டின் பலம்! குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு பெருமிதம்!