×
 

பெங்களூருவை திக்குமுக்காட வைக்கும் டிராஃபிக்..!! ஐடி ஊழியர்களுக்கு வருகிறது WFH..!!

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

'சிலிக்கான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக மக்கள் தொகை வேகமாக உயர்ந்து, வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு (ORR) உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நகரின் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைப்பதற்காக பெங்களூர் போக்குவரத்து காவல்துறை புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: உலகின் நெரிசல் மிகுந்த நகரங்கள்: லிஸ்டில் பெங்களூரு.. எத்தனையாவது இடம் தெரியுமா..??

இத்திட்டத்தை வகுத்தவர்கள் பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவின் இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி மற்றும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆகியோர். இதில் முக்கிய அம்சங்களாக பின்வருவன இடம்பெற்றுள்ளன: 

1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

ஐடி மற்றும் பயோடெக் நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து பணியாற்ற (Work From Home) அனுமதி வழங்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் 'கார் இல்லாத நாள்' (Car-Free Day) அமல்படுத்தி, அன்று பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், நகரில் வாகனப் பயன்பாடு 10 சதவீதம் குறையும் என்றும், அதனால் போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் வரை குறையும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தினசரி 2,500 முதல் 3,000 வரை புதிய வாகனங்கள் சாலைகளில் சேர்வதால் நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கார்த்திக் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் ஐடி மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தால், திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேட்டி அளித்த பெங்களூர் நகர போக்குவரத்து இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது: “பெங்களூரில் வாகன எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவுட்டர் ரிங் ரோடில் குறிப்பாக நெரிசல் தீவிரமாக உள்ளது. இதை குறைக்கும் வகையில் காவல்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். BMTC, BBMP உள்ளிட்ட துறைகளும் இதில் பங்கேற்க உள்ளன. வாகனங்களை குறைப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.” இத்திட்டம் வெற்றி பெற்றால், பெங்களூரு நகரின் போக்குவரத்து சுமூகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: உலகின் நெரிசல் மிகுந்த நகரங்கள்: லிஸ்டில் பெங்களூரு.. எத்தனையாவது இடம் தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share