கர்நாடகாவில் பயங்கர விபத்து! சொகுசு பஸ் தீப்பிடித்து 17 பேர் பலி! அதிகாலையில் நடந்த கோரம்!!
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா: கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை (டிசம்பர் 25, 2025) நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் தனியார் சொகுசு படுக்கை வசதி (சிலீப்பர் கோச்) பேருந்து ஒன்று முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் குறைந்தது 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கோகர்ணா நோக்கி சென்று கொண்டிருந்த சீபர்ட் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலூக்காவில் உள்ள கோர்லத்து கிராஸ் அருகே ராஷ்ட்ரிய நெடுஞ்சாலை 48-ல் சென்ற போது எதிர்த்திசையில் வந்த கன்டெய்னர் லாரி டிவைடரைத் தாண்டி வந்து பேருந்தின் மீது மோதியது. இந்த கோர மோதலால் பேருந்தில் உடனடியாக தீ பரவியது. பேருந்து முழுவதும் சில நிமிடங்களில் தீயில் சிக்கி முற்றிலும் எரிந்து நாசமானது.
இதையும் படிங்க: பிறந்தார் இயேசு கிறிஸ்து!! தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை!
பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் கோகர்ணா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் பெரும்பாலோர் தூங்கிக் கொண்டிருந்தனர். தீ பரவியதும் சிலர் ஜன்னல்களை உடைத்து தப்பியுள்ளனர். ஆனால் பலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
விபத்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு மற்றும் விசாரணைப் பணிகளை மேற்பார்வையிட்டார். ஹிரியூர் கிராமிய போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் நிகழ்ந்த இந்த கோர விபத்து கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்க பார்க்கிறது மத்திய அரசு! அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!