இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!
அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான ஒரு பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்கது என புகழ்ந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டு நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு நாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க நிலக்கரி ஏற்றுமதி முக்கிய இடம் பெற்றுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “அமெரிக்கா உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக உள்ளது. நாங்கள் பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். கடந்த சில மாதங்களில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். இதனால் நிலக்கரி ஏற்றுமதி வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் சிறந்ததாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நிலக்கரியை ஒரு உயர்தர தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான முக்கிய பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுக்கு நிலக்கரி ஏற்றுமதியை கூர்மையாக உயர்த்தவும், அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.”
இதையும் படிங்க: ரஷ்யாவை கழட்டிவிட்டு வெனிசுலாவிடம் ஐக்கியம்! இந்தியாவின் உள்ளே வெளியே கேம்! ட்ரம்ப் அழுத்தமா?
டிரம்ப் தனது ஆட்சியின் வெற்றியாக இதை சித்தரித்தார். “நாட்டின் மாற்றம் விரைவாகவும் தீர்க்கமாகவும் நடந்து வருகிறது. இனி உள்நாட்டு விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. உலகளாவிய ஏற்றுமதியில் கவனம் செலுத்தி அதை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்” என அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு நிலக்கரி இறக்குமதியை எளிதாக்குவதோடு, அமெரிக்காவுக்கு பெரிய சந்தையை உறுதி செய்கிறது. இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க நிலக்கரி தரம் மற்றும் விலை போட்டித்தன்மை கொண்டதாக இருப்பதால் இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களுடன் இணைந்து, அமெரிக்கா உலக நிலக்கரி சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!