ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!
''ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது '' என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ள எந்த நாட்டின்மீதும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இது இறுதியான முடிவு என்றும் அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது பெரும் அளவில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளன. ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரும் கோரிக்கை வலுத்து வருகிறது.
ஈரான் அரசு போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஈரான் அரசு போராட்டங்களை அடக்குவதை நிறுத்தாவிட்டால், அமெரிக்க ராணுவ நடவடிக்கை இருக்கலாம் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க: ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!! ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!
இப்போது பொருளாதார ரீதியாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், டிரம்ப் இந்த 25% வரி உத்தரவை பிறப்பித்துள்ளார். "ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்த நாடும், அமெரிக்காவுடன் செய்யும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இது இறுதியானது, உறுதியானது" என்று டிரம்ப் Truth Social-இல் பதிவிட்டுள்ளார்.
சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் முக்கிய வணிகத் தொடர்புகளை கொண்டுள்ளன. இந்த வரி காரணமாக அந்நாடுகளின் அமெரிக்காவுடனான ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனா போன்ற பெரிய வர்த்தக நாடுகள் மீது இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஈரான் மீதான இந்த பொருளாதார அழுத்தம், தற்போதைய போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தலாம் அல்லது அரசை பேச்சுவார்த்தைக்கு இழுக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெள்ளை மாளிகை இதுபற்றி விரிவான விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், இது ஈரான் மீதான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!