×
 

வரியை விமர்சினம் செய்றவங்க முட்டாள்!! அமெரிக்கா மதிப்பு என்ன ஆகிறது? ட்ரம்ப் காட்டம்!

வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

வெளிநாட்டு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட சுங்க வரிகளை விமர்சிக்கும் நபர்களை "முட்டாள்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரிகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் பங்கு சந்தை சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்களை அவர் தனது சமூக ஊடகப் பதிவில் பகிர்ந்துள்ளார்.

அதிபர் டிரம்ப் கூறுகையில், "வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள். நாம் இப்போது உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாகவும், மிகவும் மதிக்கப்படும் நாடாகவும் உள்ளோம். பணவீக்கம் இல்லாமல், பங்கு சந்தை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த வரிகளால் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக மாறியுள்ளதாகவும், அனைத்து நாடுகளாலும் மதிக்கப்படுகிறது என்றும் அவர் சேர்த்தார்.

இந்த வரி வருவாயிலிருந்து, அதிக வருமானம் சம்பாதிக்கும் நபர்களைத் தவிர்த்து, ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் குறைந்தபட்சம் 2,000 டாலர் ஈவு தொகையாக (கிட்டத்தட்ட 1.77 லட்சம்) வழங்கப்படும் என டிரம்ப் உறுதியளித்தார். "அமெரிக்கா வரிகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைப் பெறுகிறது" என்று அவர் சொன்னார். 2025 நிதியாண்டில் வரி வருவாய் 215.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக பொதுத்தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

இதோடு, அமெரிக்காவில் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், தொழிற்சாலைகள் நாடு முழுவதும் பரவலாக உருவாகி வருவதாகவும் அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்த வரிகள் அமெரிக்க தொழில்களைப் பாதுகாக்கின்றன என்றும், வெளிநாட்டு நாடுகளுடனான வர்த்தக இழப்புகளைத் தடுக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளையில், டிரம்ப் அதிபர் நிர்வாகம் விதித்துள்ள இந்த வரிகள் தொடர்பாக உலக நாடுகள் சார்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த வரிகள் உலக வர்த்தகத்தைத் தடை செய்யும் என்றும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு விலை உயர்வை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதிபர் டிரம்பின் இந்தக் கருத்து, அவரது வரி கொள்கைகளின் வெற்றியை வலியுறுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இந்த வரிகள் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இருப்பினும், அமெரிக்க பங்கு சந்தை இந்தக் காலகட்டத்தில் உயர்வடைந்துள்ளதாகவும், வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாகவும் அரசுத் தரப்பினர் சொல்கின்றனர். இந்த விவாதம் அமெரிக்காவின் எதிர்கால வர்த்தகக் கொள்கைகளைப் பாதிக்கும் என்பதால், உலக அளவில் கவனம் பெறுகிறது.

இதையும் படிங்க: முடிவுக்கு வருமா வரி வர்த்தக போர்! இந்திய குழு அமெரிக்கா பயணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share