×
 

அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் இணங்கவில்லை என்றால், அந்நாட்டுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.

வாஷிங்டன்: ஈரான் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்நாட்டுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஈரானில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படும். பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒன்று பெரிய ஒப்பந்தம், அல்லது ஒப்பந்தமே இல்லை. ஒப்பந்தம் இல்லையென்றால் மீண்டும் போர்க்களத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் அது முன்பை விட மிகப் பெரியதாகவும் வலிமையானதாகவும் இருக்கும். யாரும் அதை விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

உலக நாடுகளில் பெரும்பாலானவை ஈரானுடனான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தான எந்த ஒப்பந்தத்தையும் விட மிகப் பெரியதாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். “இதன் முக்கியத்துவம் ஈடு இணையற்றது” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

ஒப்பந்தம் உடனடியாக சவூதி அரேபியா மற்றும் கத்தாருடன் தொடங்க வேண்டும் என்றும், மற்ற நாடுகள் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு செய்யாத நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறக் கூடாது என்றும், அது தீய நோக்கத்தைக் காட்டும் என்றும் எச்சரித்தார்.

மேலும், அனைத்து நாடுகளும் ஆபிரகாம் உடன்படிக்கைகளில் (Abraham Accords) உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஈரான் தனது நிபந்தனைகளுக்கு இணங்கி அமெரிக்க அதிபருடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், அவர்களையும் இந்த புதிய உலகக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாக இருக்கும் என்றார். இதன் மூலம் மத்திய கிழக்கு ஒன்றுபட்டதாகவும், சக்திவாய்ந்ததாகவும், பொருளாதார ரீதியில் வலுவானதாகவும் மாறும் என்ற நம்பிக்கையை டிரம்ப் வெளிப்படுத்தினார்.

தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா அல்லது மீண்டும் பதற்றம் அதிகரிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சி, உலகப் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share