அதிபர் ட்ரம்பின் புதிய வரிகள்! மருந்துகளுக்கு 100% வரி! இந்தியா தலையில் இறங்கிய பேரிடி!
மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25% இறக்குமதி வரிகளை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வரி, அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை கட்டத் தொடங்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
"அக்டோபர் 1 முதல், பிராண்டட் அல்லது காப்புரிமை மருந்துகளுக்கு 100% வரி விதிப்போம். அமெரிக்காவில் உங்கள் உற்பத்தி ஆலையை கட்டத் தொடங்கவில்லை என்றால், இந்த வரி தவிர்க்க முடியாது. ஆனால், கட்டுமானம் தொடங்கினால், எந்த வரியும் இல்லை" என்று டிரம்ப் தனது டிரூத் சோஷியல் பதிவில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இதேபோல், அக்டோபர் 1 முதல் சமையலறை அலமாரிகள் மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரி, பர்னிச்சருக்கு 30 சதவீத வரி, கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள், வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தி, உள்ளூர் உற்பத்தியை பாதுகாக்கும் என்று டிரம்ப் கூறினார்.
இதையும் படிங்க: நான் இந்தியாவின் ரசிகன்!! அது அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு! ஐஸ் மழை பொழியும் அமெரிக்க அமைச்சர்!
இந்தியாவுக்கு இது பெரும் சவாலாக அமையும். அமெரிக்கா, இந்திய மருந்து ஏற்றுமதிக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. குறிப்பாக, மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 3.6 பில்லியன் டாலர் (தோராயமாக 31,626 கோடி ரூபாய்) மதிப்புள்ள மருந்துகளை ஏற்றுமதி செய்தது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 3.7 பில்லியன் டாலர் (32,505 கோடி ரூபாய்) ஏற்றுமதி நடந்துள்ளது.
இந்த புதிய வரி, இந்திய மருந்து நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்து, ஏற்றுமதியை பாதிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். "இது இந்தியாவின் மருந்து துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகள் கட்டுவதற்கான செலவு அதிகமாக இருக்கும்" என்று ஒரு நிபுணர் கூறினார். இருப்பினும், ஜெனரிக் மருந்துகள் இந்த வரியில் இருந்து விலக்கு பெறலாம் என சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வரி அறிவிப்பு, அமெரிக்காவின் வர்த்தக கொள்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அனைத்துலக ஊடகங்கள் கருதுகின்றன. இந்திய அரசு இதை எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு இந்தியா ரொம்ப முக்கியம்!! மொத்தமாக சரணடைந்த அமெரிக்க அமைச்சர்!