உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்யும் தவெக!! கர்நாடகா, காவிரி போராட்டம் திசைமாற்ற முயற்சியா?!
உதயநிதி ஸ்டாலின் பேச்சை எதிர்த்து தவெக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. காவிரி பிரச்சனையை விட இந்த விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதம் உருவாகியுள்ளது.
தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநிலம் முழுவதும் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
உதயநிதியின் சில கருத்துகள் நாகரிக எல்லையை மீறியதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், அந்தப் பேச்சை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மாநிலம் தழுவிய போராட்டத்தை தவெக முன்னெடுத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனையால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், காவிரி உரிமைக்காக தவெக இதற்கு முன் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!
மேலும், கர்நாடகாவில் தமிழர்களுக்கும் தமிழ் திரைப்படங்களுக்கும் எதிராக சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியபோதும், கட்சி சார்பில் வலுவான கண்டனம் வெளியாகவில்லை என்பதும் அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில், காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் பேசப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை மட்டுமே மையமாக வைத்து அரசியல் மோதல் உருவாக்கப்படுவது, தமிழகத்தின் அடிப்படை உரிமைப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளும் அபாயம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் அரசியல் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதுவது மாநிலத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அதே நேரத்தில், ஒரு தலைவரின் பேச்சு சட்டத்தை மீறியதாக கருதப்பட்டால், காவல் துறையில் புகார் அளிப்பது, வழக்குப் பதிவு செய்வது அல்லது நீதிமன்றத்தை அணுகுவது போன்ற சட்டப்பூர்வ வழிகள் உள்ளன என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் அணுகுமுறையே மாநில நலனுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற விவாதமும் தற்போது வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!