உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலோ வைரஸ் தொற்று?! அறிகுறிகள் காணப்பட்டதால் ஹை அலர்ட்!
உகாண்டாவில் இருந்து பெங்களூரு வந்த பெண், எபோலா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளானாரா என சந்தேகம் எழுந்து உள்ளது. ரத்த மாதிரி சோதனையில் அவருக்கு எபோலா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் காரணமாக உலக நாடுகள் எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், உகாண்டாவில் இருந்து பெங்களூரு வந்த பெண் ஒருவருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் உயிருக்கு ஆபத்தான எபோலா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதனால், உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உகாண்டாவின் கம்பாலா நகரில் இருந்து 28 வயதான நாகிரி லத்தீப்பா என்ற பெண் கடந்த 23ஆம் தேதி பெங்களூரு வந்துள்ளார். அவர் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னை வர தயாராக இருந்த விமானத்தில் திடீர் புகை!! அலறியடித்து வெளியேறிய பயணிகளால் 2 பேர் காயம்!
அந்த பெண் தன்னிடம் எபோலா அறிகுறிகளை போன்ற பிரச்னைகள் இருப்பதாக தெரிவித்ததால், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரியை ஆய்வுக்காக அனுப்பினர். பரிசோதனை முடிவில், அந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாக தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய எபோலா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் எபோலா சந்தேகத்தால் ஏற்பட்ட பரபரப்பு, பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு தற்போது குறைந்துள்ளது.
இதையும் படிங்க: 5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!