இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்! மோடி போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்!
பிரிட்டன் பிரதமர் கியர் ஸடார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக (அக்.8) புதன்கிழமை காலை மும்பை வந்தடைந்தார்.
பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டார்மர், பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (அக்டோபர் 8) புதன்கிழமை காலை லண்டனில் இருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தார்.
அவரை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் ஆகியோர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஸ்டார்மரும் ஃபட்னவிஸும் சிறிது நேரம் நலம் விசாரித்து பேசினர்.
இந்த இரண்டு நாள் பயணத்தில் (அக்டோபர் 8-9), பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டார்மர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஆலோசனை நடைபெறும்.
இதையும் படிங்க: இது இனரீதியான மிரட்டல்!! இத பொறுத்துக்க மாட்டோம்!! பிரிட்டன் பிரதமர் வார்னிங்!
மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள ஒத்துழைப்பு ஆகியவையும் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்திய-பிரிட்டன் 'விரிவான வியூக கூட்டாண்மை'யை 'தொலைநோக்குத் திட்டம் 2035' (Vision 2035) அடிப்படையில் மேலும் வலுப்படுத்துவது முக்கிய இலக்காக உள்ளது.
தொழில்துறை சந்திப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்த வாய்ப்பு
நாளை (அக்டோபர் 9) மும்பையில், மோடியும் ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CEPA), தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து விவாதிக்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் மோடியின் பிரிட்டன் பயணத்தின் போது CEPA ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த விஜயத்தின் போது, FTA முழுமையாக முடிவடைய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும்.
உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பங்கேற்பு
ஸ்டார்மரின் விஜயத்தின் முக்கிய அம்சமாக, மும்பையில் நடைபெறும் 6-ஆவது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாடு (Global Fintech Fest) உள்ளது. இதில் மோடியும் ஸ்டார்மரும் கலந்து கொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்த உள்ளனர்.
75 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், 7,500 நிறுவனங்கள் மற்றும் 800 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு, நிதி தொழில்நுட்பம், டிஜிட்டல் புதுமை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
பிரிட்டன் பிரதமராக ஸ்டார்மர் பதவியேற்ற (ஜூலை 2024) பிறகு இது அவரது முதல் இந்தியா பயணமாகும். இது, கடந்த ஜூலை மோடியின் பிரிட்டன் பயணத்தின் தொடர்ச்சியாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் மற்றும் விசா விதிமுறைகள் குறித்தும் சில விவாதங்கள் நடைபெறலாம்.
இந்த விஜயம், இந்திய-பிரிட்டன் உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டார்மரின் பயணம், பொருளாதார ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்! எப்போ வர்றீங்க! புடினுக்கு போன் போட்டு பேசிய மோடி!