×
 

இந்த பகுதி மக்களே விட்டுடாதீங்க.. நாளை ஒரே ஒரு வார்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை ஒரு வார்டில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15-ஆம் தேதி கடலூரில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மகத்தான முயற்சியாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, 46 கிராமப்புற சேவைகள் மற்றும் 43 நகர்ப்புற சேவைகளை வழங்குகிறது.

பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல சேவைகள் இதில் அடங்கும். மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்குவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடி தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எங்கெங்கு நடக்கிறது தெரியுமா..??

இத்திட்டம், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தவறிய பெண்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதனை “புரட்சிகரமான திட்டம்” என வர்ணித்து, இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு நிர்வாகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது எனக் குறிப்பிட்டார். இத்திட்டம், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, குறிப்பாக பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, திமுக அரசின் மக்கள் நல முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (20.09.2025) ஒரு வார்டில் நடைபெறவுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126க்குட்பட்ட மந்தைவெளி, ஜெத் நகரில் உள்ள ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த வார்டை சேர்ந்த பொதுமக்கள் அங்கு நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.09.2025) சென்னை, தியாகராய நகர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 133-வது வார்டில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” இரண்டாவது முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களின் விவரங்கள் குறித்தும், முகாமில் செய்துதரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் இந்த ஆய்வின்போது, உங்களுடன் ஸ்டாலின் முகாம் அலுவலர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி போன்றவை குறித்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தந்த பகுதிகள் தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share