9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!
2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9-வது பட்ஜெட் என்பதுடன், வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுகிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்ற பெருமையையும் பெறுகிறது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 75 ஆண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பட்ஜெட் உரையின் மரபு இன்று மாறுகிறது. 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கத்திற்கு மாறாகத் தனது உரையின் பகுதி-B பிரிவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9-வது பட்ஜெட் என்பதுடன், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்ற பெருமையையும் பெறுகிறது.
பகுதி-A : இது நாட்டின் பொருளாதார ஆய்வு, புதியத் திட்டங்கள் மற்றும் துறை வாரியான நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய நீண்ட உரையாக இருக்கும்.
இதையும் படிங்க: BUDGET 2026: நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!!
பகுதி-B : இது பொதுவாக வரி விதிப்பு மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவிப்புகள் அடங்கியச் சுருக்கமானப் பகுதியாக இருக்கும்.
ஆனால், இந்த 2026 பட்ஜெட்டில் பகுதி-B தான் மையமாக இருக்கப்போகிறது. இதில் வரி அறிவிப்புகளுடன் சேர்த்து, இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உற்பத்தித் துறைக்கான புதியக் கொள்கை முடிவுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகச் சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகள் மிக விரிவாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலையைக் கட்டுப்படுத்த, இறக்குமதி வரி 6%-லிருந்து 4%-ஆகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். புதிய வரி விதிப்பு முறையில் ₹12 லட்சம் வரை ஈட்டுவோருக்கு வரி விலக்கு ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் 30% வரி அடுக்கிற்கான வரம்பு ₹40 லட்சமாக உயர்த்தப்படலாம் மற்றும் தரநிலை விலக்கு ₹1 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி-B மூலம் சுங்க வரி அடுக்குகளை எளிமைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சார் உற்பத்திக்கு 15% வரிச் சலுகையை மீண்டும் கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம். 2026-ல் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குப் புதிய கடன் உதவித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
வரி அறிவிப்புகளை வெறும் தொழில்நுட்பத் தகவல்களாகப் பார்க்காமல், அவற்றை ஒரு தேசத்தின் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வையாக மாற்றும் முயற்சியே இந்த மரபு மாற்றத்திற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பகி-காதா டிஜிட்டல் டேப்லெட்டில் இருந்து பொதுமக்களுக்கு என்னென்ன சலுகைகளை அள்ளித்தரப் போகிறார் என்பது இன்று காலை 11 மணிக்குத் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி