சாதிய அடையாளங்களை நீக்க உ.பி அரசு முடிவு.. சமூக ஐக்கியத்திற்காக அதிரடி உத்தரவு..!!
உத்திர பிரதேசத்தில் சாதிய சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில அரசு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, சாதி சார்ந்த அரசியல் ஊர்வலங்கள், வாகனங்களில் சாதி குறிப்புகள் மற்றும் போலீஸ் பதிவுகளில் சாதி குறிப்புகளுக்கு முழுமையான தடை விதித்துள்ளது. இந்த 10 புள்ளிகளைக் கொண்ட உத்தரவு, சமூகத்தில் சாதி மோதல்களைத் தடுத்து, தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆத்யநாத் தலைமையிலான பாஜக அரசின் இந்த நடவடிக்கை, 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சாதி அரசியலை குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஒற்றைப் பெஞ்ச் நீதிபதி திவாகர் தலைமையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், போலீஸ் பதிவுகளில் (FIR, கைது மெமோ, பறிமுதல் அறிக்கை) சாதி குறிப்பிடுவது "பிற்போக்கானது" மற்றும் "அரசியல் அரசியலமைப்புக்கு முரணானது" என்று விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சமூக நீதி எல்லாம் அரசியல் நேரத்து சாயம் தானா? முதல்வரை விளாசிய நயினார்...!
"சாதி மகிமைப்படுத்தல் 'எதிர் தேசிய' செயல்" என்று நீதிமன்றம் தெரிவித்து, குற்றவாளிகளின் சாதி பதிவு நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், போலீஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகள், வாகனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சாதி சார்ந்த உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாநில அரசு இதற்கான விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வாகனங்களில் சாதி பெயர்கள் அல்லது ஸ்லோகன்கள், ஸ்டிக்கர்கள் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். நகரங்களில் சாதி சார்ந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், சமூக ஊடகங்களில் சாதி மகிமைப்படுத்தல் கண்காணிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SC/ST (தடுப்பு) சட்டம் தொடர்பான வழக்குகளில் மட்டும் சாதி குறிப்பிடுவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதை "கண் துடைப்பு" என்று விமர்சிக்கின்றன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "சாதி பாகுபாட்டை மனதில் இருந்து அகற்றுவதற்கு என்ன செய்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். பகுஜன் கட்சி மற்றும் NISAD போன்ற சாதி சார்ந்த கட்சிகள் இதன் தாக்கத்தைப் பற்றி கவலை தெரிவித்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் சாதி அரசியல் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்தத் தடை 2027 தேர்தலில் பாஜகவின் உத்தியை வலுப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போலீஸ் துறையில் SOPகள் மாற்றப்பட்டு, கிரைம் போர்ட்டலில் சாதிகளும் நீக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை உண்மையில் சாதி பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருமா என்பது காலம் தீர்ப்புக்கூறும்.
இதையும் படிங்க: கனிமொழி அவர்களே...!! திமுகவை ஒரு காலத்துல காப்பாத்துனதே அதிமுக தான் தெரியுமா? - எடப்பாடி அதிரடி பதிலடி...!